வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு தமிழகத்தில் 'ஹவுஸ் சர்ஜன்' கட்டணம் ரூ.30 ஆயிரமாக குறைப்பு

வெளிநாட்டில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கான `ஹவுஸ் சர்ஜன்’ பயிற்சி கட்டணம் தமிழகத்தில் ரூ.30 ஆயிரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Update: 2022-07-29 18:38 GMT

சென்னை,

சென்னை தலைமைச்செயலக பணியாளர்களுக்காக தலைமைச்செயலக சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி ஒரு இயக்கமாக நடத்தப்பட்டு வருகிறது. தலைமைச்செயலக பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும்வரை இங்கு தொடர்ந்து முகாம் நடத்தப்படும்.

கல்லூரிகளில்...

அடுத்ததாக மாநிலக் கல்லூரியில், 18 வயதைக் கடந்த மாணவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிவைக்கப்படும். அதைத் தொடர்ந்து சென்னையில் இருக்கும் அனைத்துக் கல்லூரிகளிலும் மாநகராட்சியின் சார்பில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

தமிழகத்தில் 40 லட்சத்து 2 ஆயிரத்து 853 பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே மற்ற அனைவரும் தடுப்பூசி முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குரங்கு அம்மை இல்லை

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் உண்மை அல்ல. இந்த நோய் பற்றிய தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

கட்டணம் குறைப்பு

வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வந்துள்ள பட்டதாரிகள் தமிழகத்தில் 'ஹவுஸ் சர்ஜன்' எனப்படும் சி.ஆர்.ஆர்.ஐ. பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கான கட்டணம் ரூ.5.20 லட்சத்துக்குப் பதிலாக இனி ரூ.30 ஆயிரம் மட்டும் செலுத்தினால் போதும்.

ஹவுஸ் சர்ஜன் பயிற்சி எடுப்பதற்கு, வெளிநாடுகளில் பயின்ற மருத்துவ மாணவர்களுக்கு இந்திய அளவில் 7.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு இருந்தது. அதை 20 சதவீதமாக உயர்த்த தேசிய மருத்துவ குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. மேலும் தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளுக்காக ஆட்கள் தேவை அதிகம் உள்ளது. எனவே வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இந்த கல்லூரிகளில் 'ஹவுஸ் சர்ஜன்' பயிற்சி எடுக்க அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

உடனே விண்ணப்பிக்க வேண்டும்

சென்னையில் மட்டும் 521 பேர் 'ஹவுஸ் சர்ஜன்' பயிற்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஒதுக்கீடு வழங்கப்படும்.

எனவே பயிற்சிக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உடனடியாக மருத்துவ கல்வி இயக்குனரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 11 மருத்துவக் கல்லூரிகளில் அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

உக்ரைன் மாணவர்கள்

உக்ரைனில் மருத்துவம் படித்து போரின் காரணமாக இடையில் சொந்த நாடு திரும்பியவர்கள் வெளிநாடுகளில் கல்வியைத் தொடர நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. அதை விரைவில் எதிர்பார்க்கிறோம்.

கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள்தான் பூஸ்டராக போடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கையிருப்பில் 27 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு தலைமைச்செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்