மண்ணில் மறையும் வரலாறு
பழமையான வரலாற்றுச்சின்னங்கள் மண்ணில்புதைந்து வரும் நிலையில் வரலாற்று ஆய்வு நடுவத்தினர் அதனை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
போடிப்பட்டி
மடத்துக்குளம் பகுதியில் பழமையான வரலாற்றுச்சின்னங்கள் மண்ணில்புதைந்து வரும் நிலையில் வரலாற்று ஆய்வு நடுவத்தினர் அதனை ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளனர்.
கல்வெட்டுகள்
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல பழமையான வரலாற்றுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல நூறு ஆண்டுகள் கடந்த கல்வெட்டுகள், நடுகற்கள், நெடுங்கற்கள், சிற்பங்கள் போன்றவை அந்தந்த காலத்தின் வரலாறை மட்டுமல்லாமல் பழக்க வழக்கங்களை, வாழ்வியலை, கலாசாரத்தை நமக்கு உணர்த்த கூடியவையாக உள்ளன.
அமராவதி நதிக்கரையோர நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களாக மடத்துக்குளத்தையடுத்த கடத்தூர், கணியூர், காரத்தொழுவு, கண்ணாடிப்புதூர், கொள்ளுமாம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அந்தவகையில் கண்ணாடிப்புத்தூர் பகுதி கடந்த காலங்களில் வீரபாண்டிய சதுர்வேதி மங்கலம் என்னும் புகழ்பெற்ற ஊராக விளங்கியுள்ளது.
2 ஆயிரம் ஆண்டு
இங்கு 11-12-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட திருநந்தீஸ்வரர், திருக்கைலாய நாதர் கோயில்களில் நிலதானம், இறையிலி நிலங்கள் சார்ந்தும் கல்வெட்டுப் பதிவுகள் உள்ளன.அதற்கு முன்பே இந்த பகுதியில் சேரனை வென்ற சோழன் பெருவெளி என்றும் சோழமாதேவி பெருவழி, வீரநாராயணப் பெருவழி என்றும் பெருவழி இருந்துள்ளதற்கான சான்றுகளும் உள்ளன.அதுமட்டுமல்லாமல் கண்ணாடிப்புத்தூர், நீலம்பூர் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டை இந்தப் பகுதி மிகுந்த தொல்பழங்காலமான பகுதி என்று உறுதிப்படுத்துகிறது.
இவையனைத்தையும் உறுதி செய்யும் வகையில் கண்ணாடிப்புத்தூரில் சுமார் 10 அடிக்கும் உயரமான நெடுங்கல் இருந்ததையும் தற்போது அது மறைந்து வருவதையும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த பகுதியில் கடந்த காலங்களில் மாப்பிள்ளைக்கல் பயன்பாட்டில் இருந்ததையும், தாய்மாமன் மணமகளை கல்லில் அமர்த்தித் தனது தோளில் தூக்கி சென்றதையும் கூறுகின்றனர். மேலும் இந்த நெடுங்கல்லுக்கு கிடா வெட்டி படையல் போட்டு வாங்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.
பாதுகாத்து வருகிறோம்
அந்த ஊரில் வசிக்கும் சுமார் 80 வயதிற்கும் மேற்பட்ட பெரியவர்கள் இதனைப் பற்றிக் கூறும்போது " 10 அடிக்கு உயரமான நெடுங்கல் இருந்ததைத் தாம் பார்த்ததாகவும் காலப்போக்கில் ஊரின் வளர்ச்சியில் சாலைப்பகுதி உயர்ந்து நெடுங்கல்லின் உயரம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றனர்.. படிப்படியாய் மண்ணில் புதைந்து வந்தாலும் இந்த நெடுங்கல்லை அந்தப் பகுதி மக்கள் தம்முடைய ஊரின் அடையாள சின்னமாகப் பாதுகாத்து வருகின்றனர். இந்த நெடுங்கள் உட்பட கரைவழி நாட்டில் இருக்கும் கல்வெட்டுகள், தொல்பழங்காலச்சின்னங்களை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து கரை வழி நாடு எனும் பெயரில் ஆவணப்படுத்தி வருகின்றனர்.