இடுக்கியில் அட்டகாசம் செய்யும் காட்டுயானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு மலைவாழ் மக்கள் எதிர்ப்பு-வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

இடுக்கியில் அட்டகாசம் செய்து வரும் யானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-07 18:45 GMT

பொள்ளாச்சி

இடுக்கியில் அட்டகாசம் செய்து வரும் யானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானால் சாந்தன் பாறை ஆகிய பகுதிகளில் 16 ரேஷன் கடைகள், 60-க்கும் மேற்பட்ட வீடுகளை அரிக்கொம்பன் என்கிற யானை சேதப்படுத்தி உள்ளது. மேலும் 10 பேர் யானை தாக்கி இறந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த யானையை பிடித்து பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் உள்ள பரம்பிக்குளத்தில் விடுவதற்கு 5 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்து உள்ளது.

அதன் அடிப்படையில் யானையை பரம்பிக்குளத்தில் கொண்டு வந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரம்பிக்குளத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை மலைவாழ் மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

மீண்டும் போராட்டம்

பரம்பிக்குளத்தில் 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 600 குடும்பங்களை சேர்ந்த 2500 பேர் வசித்து வருகின்றனர். இடுக்கியில் 10 பேரை கொன்ற அரிக்கொம்பன் என்கிற யானையை பரம்பிக்குளத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அந்த யானை பரம்பிக்குளத்தில் விட்டால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும்.

வீடுகள், ரேஷன் கடைகளை யானை இடிப்பதோடு, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும். எனவே அரிகொம்பன் யானையை பரம்பிக்குளம் பகுதிக்கு கொண்டு செல்வது என்கிற நிபுணர் குழுவின் முடிவை கைவிட வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி மீண்டும் பரம்பிக்குளத்தில் வனத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்