மருதுசேனை அமைப்பின் தலைவர் கைது

மருதுசேனை அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-24 18:45 GMT

காரைக்குடி, 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைட்டான்பட்டியை சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித் (வயது 27). இவர் காரைக்குடியில் நடைபெற்ற கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். கோர்ட்டு உத்தரவின்படி காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வந்தார். இதற்காக காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். கடந்த 18-ந் தேதி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தபோது வினித்தை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பியது. இது குறித்து காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதுசேனை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் ஆதிநாராயணன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, உதயகுமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது. இதையடுத்து ஆதி நாராயணனின் மைத்துனர் தனசேகரன்(33) உள்பட மதுரை கூலிப்படையை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஆதிநாராயணன் உள்பட சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காரில் திருப்பத்தூர் வழியாக சென்ற ஆதிநாராயணனை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அரசியலிலும், தொழிலும் தனக்கு போட்டியாக அறிவழகன் உருவெடுத்ததாகவும், விருதுநகர் சந்தை ஏலத்தில் பிரச்சினை மேலும் பெரிதானதாகவும், அறிவழகன் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதற்காகதான் அறிவழகனை கொலை செய்ததாகவும் போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்