மகனை சிகிச்சை அளிக்க சொல்லிவிட்டு சுற்றுலா சென்ற அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பணி இடைநீக்கம்

அரசு ஆஸ்பத்திரியில் மகனை சிகிச்சை அளிக்க சொல்லிவிட்டு சுற்றுலா சென்ற தலைமை டாக்டர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-06-21 21:03 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் தலைமை டாக்டராக இருப்பவர் தினகர். இங்கு பெண் டாக்டர் சண்முகவடிவு என்பவர் உள்பட 4 உதவி டாக்டர்கள், நர்சுகள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டாக்டர் தினகர் மற்றும் சண்முகவடிவு ஆகியோர் கடந்த ஞாயிறு அன்று சுற்றுலா சென்றதாகவும், மேலும் மருத்துவ பயிற்சி முடித்த தினகரின் மகன் நோயாளிகளுக்கு ஞாயிறு அன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்ததாகவும் புகார் எழுந்தது. மேலும் இதுபற்றிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இணை இயக்குனர் ஆய்வு

இதையடுத்து ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கோமதி கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பணியில் இருந்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினார்.

பணிஇடை நீக்கம்

இதில் டாக்டர்கள் தினகர் கடந்த ஞாயிறு அன்று தன்னுடைய மகனை கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வைத்ததும், மேலும் அன்று பணியில் இருக்க வேண்டிய டாக்டர் சண்முகவடிவுடன் சுற்றுலா சென்றதும் உறுதியானது. இதைத்தொடர்ந்து டாக்டர் தினகர், சண்முகவடிவு ஆகியோரை மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் கோமதி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்