டிராக்டர் மீது மின்கம்பி உரசியதில் வைக்கோல் எரிந்து நாசம்
டிராக்டர் மீது மின்கம்பி உரசியதில் வைக்கோல் எரிந்து நாசம்
சீர்காழி
சீர்காழி அருகே டிராக்டர் மீது மின்கம்பி உரசியதில் வைக்கோல் எரிந்து நாசமானது.
மின்கம்பியில் டிராக்டர் உரசியது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட இனாம்குணதலபாடி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது46). விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறுவை அறுவடை செய்தார்.
நேற்று அறுவடை செய்யப்பட்ட வைகோல் கட்டுகளை தனது டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஆச்சாள்புரம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இனாம் குணதலபாடி மேலத்தெரு அருகே சென்று கொண்டிருந்த போது, அங்கு தாழ்வாக சென்ற மின்கம்பியில் டிராக்டர் உரசியது.
வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்
இதில் டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் டிராக்டரில் இருந்த வைக்கோல் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும் டிராக்டரும் தீ விபத்துக்குள்ளானது.
மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில், இனாம் குணதலபாடி பகுதியில் பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகவும், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் உள்ளதால் அடிக்கடி மின் விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தாழ்வாக உள்ள மின் கம்பிகளையும், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என்றனர்.