காபி பழங்கள் அறுவடை சீசன் தொடங்கியது

வால்பாறை பகுதியில் காபி பழங்கள் அறுவடை சீசன் தொடங்கியது. விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-11-14 18:45 GMT

வால்பாறை

வால்பாறை பகுதியில் காபி பழங்கள் அறுவடை சீசன் தொடங்கியது. விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காபி சாகுபடி

மலைப்பிரதேசமான வால்பாறை பகுதியில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற பணப்பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் வால்பாறை தோன்றிய ஆரம்ப காலத்தில் காபி மட்டுமே பயிரிடப்பட்டு இருந்தது ஆனால் காபி தோட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பயன் பெற முடியும். இதனால் ஆண்டு முழுவதும் பயன் தரக்கூடிய தேயிலை செடிகளை தோட்ட நிர்வாகங்கள் பயிரிட தொடங்கியது. அவர்கள் காபி செடிகளை அகற்றி விட்டு தேயிலை செடிகளை பயிரிட்டனர். ஒரு சில எஸ்டேட் நிறுவனங்கள் மட்டும் குறைந்த அளவிலான காபி தோட்டங்களை பராமரித்து வருகின்றனர்.

அதிக மழை

வால்பாறை பகுதியில் தற்போது 12 ஆயிரத்து 678 ஹெக்டர் பரப்பளவில் தேயிலை செடிகளும், 4 ஆயிரத்து 527 ஏக்கர் பரப்பளவில் அரபிக்கா மற்றும் ரோபஸ்ட்டா என்ற 2 வகையான காபி செடிகளும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் இந்த ஆண்டு வால்பாறை பகுதியில் தேவைக்கு அதிகமாக மழை கிடைத்ததாலும், போதிய அளவிற்கு வெயில் கிடைத்ததாலும் காபி தோட்டங்களில் பூக்கள் பூத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் காய்க்க தொடங்கியுள்ளது.

விளைச்சல் அதிகரிப்பு

இதில் அரபிக்கா காபி செடிகளில் காய்த்திருந்த காய்கள் தற்போது பழுக்க தொடங்கி விட்டது .இதனால் வால்பாறை பகுதியில் காபி பழங்கள் பறிக்கும் பணி தொடங்கி விட்டது. இந்த ஆண்டு போதிய மழை, நல்ல வெப்பமான காலநிலை நிலவியதால் காபி பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது அரபிக்கா காபி செடிகளில் இருந்து பழுத்துள்ள பழங்களை பறித்து முடிப்பதற்குள் ரோபஸ்ட்டா காபி செடிகளில் காய்களும் பழுத்து விடும். இதனால் வால்பாறை பகுதியில் அடுத்த ஆண்டு(2023) பிப்ரவரி மாதம் வரை காபி பழங்கள் அறுவடை பணி முழுவீச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்