தமிழர்களும், தமிழ்நாடும் மகிழ்ச்சியாக இருப்பதே எனக்கு போதும்: முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

எனக்கு உடல்நலம் சரியில்லை என சிலர் கூறும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2024-01-12 06:11 GMT

சென்னை,

அயலகத் தமிழர் மாநாட்டில் கணியன் பூங்குன்றன் பெயரில் 13 பேருக்கு தங்கப்பதக்கங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அயலகத் தமிழர் தின விழாவின் 2-ம் நாளான இன்று 'எனது கிராமம்' திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எனக்கு உடல்நலம் சரியில்லை என சிலர் கூறும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு எப்போதும் மக்களைப் பற்றிதான் நினைப்பு; என்னை பற்றி நான் நினைத்ததே இல்லை. தமிழர்களும், தமிழ்நாடும் மகிழ்ச்சியாக இருப்பதே எனக்கு போதும். தமிழர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது எனக்கு என்ன குறை இருந்துவிடப் போகிறது?. மக்களின் முகத்தில் பார்க்கும் மகிழ்ச்சிதான் எனக்கு உற்சாக மருந்து.

நான் எப்போதும் மக்களுடன் இருப்பவன்; என் சக்தியை மீறி உழைக்கிறேன். ஓரே மாதத்தில் அரசு மொத்தம் ரூ.8,000 வழங்கியதாக மக்கள் கூறுகின்றனர். தாய் மண்ணிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற பொன்மொழியே தமிழர்கள் கடல் கடந்தும் கோலோச்ச உந்துதலாக இருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் கூறியபடி அயலகத் தமிழர் நலத்துறையை திமுக அரசு உருவாக்கியது. அயலகத் தமிழர் நலத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் உங்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றபடுகின்றன. அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் தமிழ் கற்று தரப்படுகிறது.

தமிழ்நாட்டை வளப்படுத்த நடந்தது முதலீட்டாளர் மாநாடு; உலகமே வளம் பெற நடப்பது அயலகத் தமிழர் மாநாடு. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் இங்கு முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் அன்னையின் குழந்தைகள்; எங்கு வாழ்ந்தாலும் தாய் தமிழ்நாட்டை மறக்காதீர்கள். அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்; கீழடி, பொருநை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்; தமிழோடு இணைந்திருங்கள்; நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்