ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது
குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் இன்று(சனிக்கிழமை) குருப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.;
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சிவிழா விமரிசையாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு குருபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இன்று(சனிக்கிழமை) பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
லட்சார்ச்சனை விழா
விழாவையொட்டி குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையொட்டி கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் தட்சிணாமூர்த்தி சன்னதியில் லட்சார்ச்சனை விழா நடந்தது.
இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர்.
வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த மாதம்(மே) 1-ந்தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.