சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று தாத்தாவை அடித்துக்கொன்ற பேரன்
நிலத்தகராறு தொடர்பான வழக்கு தண்டராம்பட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள எடத்தனூர் மெயின் ரோட்டில் வசிப்பவர் தண்டபாணி (வயது 63). இவரது மனைவி அன்னபூரணி. இவர்களுக்கு விஜயராஜ், திருவேங்கடம், வாசுதேவன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். தண்டபாணியின் தந்தை ஏழுமலை (90), தாயார் முத்தம்மாள் ஆகியோர் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.
தண்டபாணியின் மைத்துனர் பரமசிவத்துக்கும் ஏழுமலைக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக தண்டராம்பட்டு கோர்ட்டிலும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினையில் தண்டபாணியின் 2-வது மகன் திருவேங்கடம், அவரது மாமன் பரமசிவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலத்தகராறு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு இரு தரப்பினரும் வந்துள்ளனர். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி செல்வதற்காக ஏழுமலை பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் அவரது பேரன் திருவேங்கடம் வந்தார். அவர் ஏழுமலையை வலுக்கட்டாயமாக பஸ்சிலிருந்து கீழே இறக்கி மோட்டார் சைக்கிளில் அமர வைத்துக்கொண்டு தண்டராம்பட்டு அருகில் உள்ள ஆழியாறு சுடுகாட்டுக்குள் அழைத்துச்சென்றார்.
அங்கு எரிமேடை அருகே தாத்தா ஏழுமலையை "செத்து தொலையடா கிழவா" என்று கூறி அருகில் கிடந்த தடியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ஏழுமலையை அவரது வீட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு பேரன் திருவேங்கடம் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
தகவல் அறிந்த தண்டபாணி மற்றும் அவரது மூத்த மகன் விஜயராஜ் ஆகிய இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏழுமலையை தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முதியவர் ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசில் தண்டபாணி தனது மகன் மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.