அரசு வேலை வாங்கி தருவதாகவக்கீலிடம் ரூ.9 லட்சம் மோசடி:தந்தை-மகன்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
உத்தமபாளையத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வக்கீலிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த தந்தை-மகன்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
உத்தமபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். வக்கீல். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், "மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை மேலகுயில்குடியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் காசோலை வழக்கை நான் நடத்தினேன். இதனால், அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவரும், அவருடைய மகன்கள் சீராளன், சித்தார்த் என்ற சசிகணேஷ், பழனிசெட்டிபட்டி அண்ணா முதல் தெருவை சேர்ந்த ஜெயராமன், நாகேந்திரனின் கார் டிரைவர் முத்துசெல்வன் ஆகியோர் சேர்ந்து உத்தமபாளையம் கோர்ட்டில் எனக்கு அரசு வக்கீல் பணி வாங்கிக் கொடுப்பதாக கூறினார்கள். அதை நம்பி நான் ரூ.3 லட்சமும், 'கூகுள்-பே' மூலம் ரூ.6 லட்சமும் என மொத்தம் ரூ.9 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டனர்" என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், நாகேந்திரன், சீராளன், சித்தார்த் என்ற சசிகணேஷ், ஜெயராமன், முத்துசெல்வன் ஆகிய 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.