அரசு வேலை வாங்கி தருவதாகரூ.72¼ லட்சம் மோசடி:தம்பதி உள்பட 5 பேர் மீது வழக்கு
கூடலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக 5 பேரிடம் ரூ.72¼ லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுப்பணித்துறையில் வேலை
கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்தவர் பிரபு (வயது 27). அவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தேன். எங்கள் ஊரை சேர்ந்த சந்திரசேகரன் தமிழ்நாடு மின் வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வருகிறார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் என்னை சந்தித்து பேசினார். அப்போது கரூர் மாவட்டம் வெண்ணமலை பகுதியைச் சேர்ந்த குமார், கோவை நடுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மனைவி உஷாராணி, காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் அண்ணா நகரை சேர்ந்த கவுரிசங்கர் ஆகியோரை தனக்கு தெரிந்த நபர்கள் என்றும், அவர்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களை நன்கு தெரியும் என்றும் கூறினார்.
மேலும் அவர்கள் நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கித் கொடுத்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் 3 பேரையும் சந்திரசேகரன் எனக்கும், தேனி மாவட்டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த கார்த்திகேயன், பிரதீப்குமார், தினேஷ் குமார், ஆனந்த் ஆகியோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
ரூ.72¼ லட்சம் மோசடி
அப்போது அவர்கள் எனக்கு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர். மற்ற 4 பேருக்கும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள்.
அதை நம்பிய நான் குமாரின் மனைவி பூமகள், உஷாராணி, கவுரிசங்கர் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.13 லட்சமும், கவுரிசங்கரிடம் ரொக்கமாக ரூ.6 லட்சத்து 75 ஆயிரமும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு ஒரு பணி நியமன உத்தரவு கொடுத்தனர். ஆனால் அது போலியான உத்தரவு என்று எனக்கு தெரியவந்தது.
என்னைப் போல், மற்ற 4 பேரிடமும் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து விட்டனர். மொத்தம் 5 பேரிடம் ரூ.72 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்து விட்டனர்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
5 பேர் மீது வழக்கு
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில், குமார், பூமகள், உஷாராணி, கவுரிசங்கர், சந்திரசேகரன் ஆகிய 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.