பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்த அரசு மருத்துவமனை

வயிற்றில் குழந்தை இறந்து 2 நாட்களாகியும் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் செய்த அரசு மருத்துவமனை மீது நடவடிக்கை எடு்க்கக்கோரி மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-09-13 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா பெரியசெவலை பாஞ்சாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி(வயது 27). தொழிலாளியான இவர் நேற்று மாலை புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வக்கீல் ஆறுமுகத்துடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாயிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

7 மாத கர்ப்பிணியாக இருந்த எனது மனைவி தீபாவை பரிசோதனைக்காக நேற்று முன்தினம் டி.எடையாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்றேன். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், செவிலியர்கள், குழந்தை அசைவு நன்றாக இருக்கிறது என்று கூறினர். ஆனால் தீபா தனக்கு குழந்தை அசைவு தெரியவில்லை என்றும் வயிறு வலிப்பதாகவும் கூறினார். அப்போது தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பாருங்கள் என்று டாக்டரும், செவிலியரும் கூறினர்.

இதன் பின்னர் தீபாவை விழுப்புரத்தில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்திற்கு அழைத்துச்சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது வயிற்றில் இருக்கும் 7 மாத குழந்தை இறந்து 2 நாட்கள் ஆகிறது என அறிக்கை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நான், தீபாவை சிகிச்சைக்காக அன்று மாலையே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அங்கு சிகிச்சை அளிக்காமல் டாக்டர்கள் காலம் தாழ்த்தி வருவதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அலட்சியமாக செயல்பட்ட டி.எடையார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர்கள் மீதும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்திய டாக்டர், செவிலியர்கள் மீதும், மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

பின்னர் தீபாவுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் நடைமுறையில் ஏற்கனவே உள்ள மருத்துவ வழி முறைகளின்படி அவரது வயிற்றில் இருந்து இறந்த குழந்தையை டாக்டர்கள் அகற்றினர்.

மேலும் தொடர்ந்து தீபாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்