4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2023-05-20 18:48 GMT

சென்னை,

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். அரசாணை 354-ஐ மறுசீராய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி கோஷங்கள் எழுப்பினர்.போராட்டத்தின் போது, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசாணை 354-ஐ 5 வருடத்திற்கு ஒருமுறை மறுஆய்வு செய்யவேண்டும். ஆனால், 2017-ம் ஆண்டு முதல் இந்த அரசாணையை மறுஆய்வு செய்யவில்லை. அரசாணையை மறு ஆய்வு செய்யக்கோரி கடந்த 2019-ம் ஆண்டு போராட்டம் நடத்தினோம். அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். ஆனால், அரசாணை கிடப்பிலேயே உள்ளது. போராட்டம் மட்டும் தொடர்ந்து நடந்தவாறு இருக்கிறது.60 சதவீதம் டாக்டர்களுக்கு மட்டுமே பணப்பலன்கள் கிடைக்கிறது. அனைத்து அரசு டாக்டர்களுக்கும் ஒரே மாதிரியான பணி உயர்வும், பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும். 1,200 டாக்டர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவ படிப்புகளையும் ஒரே மாதிரியான நிலையில் பார்க்க வேண்டும். 20 ஆயிரம் டாக்டர்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்