தடுப்புச்சுவரில் மோதி அரசு பஸ் நின்றது
டிரைவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால், தடுப்புச்சுவரில் மோதி அரசு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குன்னூர்,
குன்னூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பால்மராலீஸ் பகுதி உள்ளது. அங்கிருந்து குன்னூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை பால்மராலீஸ் பகுதியில் இருந்து அரசு பஸ் புறப்பட்டு குன்னூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சை சேலாசை சேர்ந்த டிரைவர் இளங்கோ (வயது 54) ஓட்டினார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை காட்டேரி அருகே பஸ் வந்த போது, திடீரென டிரைவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சாமர்த்தியாக செயல்பட்டு பஸ்சை சாலையோர தடுப்புச்சுவரை ஒட்டி நிறுத்தினார். பஸ்சின் ஒருபகுதி தடுப்புச்சுவரில் மோதியபடி நின்றது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அருகே இருந்த ஆட்டோ டிரைவர்கள் இளங்கோ மற்றும் காயமடைந்த பயணிகளை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.