அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றது

பந்தலூர் அருகே அரசு பஸ் பழுதாகி நடுவழியில் நின்றது

Update: 2022-05-28 15:11 GMT

பந்தலூர்,

பந்தலூர் அருகே ஏலமன்னா வழியாக கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழுதடைந்து இருப்பதால், அவ்வப்போது திடீரென நடுவழியில் நின்று விடுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு அரசு பஸ் சென்றது. எலியாஸ் கடை பிரிவு பகுதியில் சென்ற போது, பழுதடைந்து சாலையின் நடுவே நின்றது.

இதனால் கொளப்பள்ளி-அய்யன்கொல்லி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சில் பயணித்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடுவழியில் இறங்கியதால் அவதி அடைந்தனர். அவர்கள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள சாலையில் நீண்ட தூரம் நடந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர். அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பஸ்களை முறையாகவும் இயக்குவது இல்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூரில் இருந்து பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, தாளூர், சேரம்பாடி வழியாக கோவைக்கு இரவு நேர பஸ் இயக்கப்பட்டு வருகிறது. உரிய நேரத்துக்கு இயக்கப்படுவது இல்லை. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பஸ்சுக்காக பயணிகள் காத்திருக்கின்றனர். எனவே, அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்