சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், விபத்துக்கு காரணமான மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Update: 2023-07-27 20:05 GMT

நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், விபத்துக்கு காரணமான மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சிறுமி பலி

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகள் சத்தியா (வயது 7), அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் சத்தியா அந்த பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டியில் கைகழுவ முயன்றாள். அப்போது மின்சாரம் தாக்கி அவள் பரிதாபமாக இறந்தாள்.

தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் அவளது உடலை வாங்க மறுத்து நெல்லை வண்ணார்பேட்டை அருகே நெல்லை-மதுரை வடக்கு புறவழிச்சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சிறுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். விபத்துக்கு காரணமான மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் பேசி முடிவெடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்