பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமிக்கு வாந்தி, மயக்கம்பேக்கரியை பொதுமக்கள் முற்றுகை

Update: 2022-09-26 18:54 GMT


திருவண்ணாமலையில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமிக்குவாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பேக்கரியை முற்றுகையிட்டனர்.

முற்றுகை

திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரில் பேக்கரி ஒன்று உள்ளது. இந்த பேக்கரியில் நேற்று மாலை சிறுமி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை சேர்ந்த இளைஞர்கள் கேக் ஒன்றை வாங்கி சென்றுள்ளனர். அந்த கேக்கை பிறந்தநாள் கொண்டாடிய சிறுமி வெட்டிவிட்டு அதனை சாப்பிட்டு உள்ளார். இதையடுத்து அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து கேக் வாங்கிய இளைஞர்கள் அதனை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு நேரில் சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளனர். அப்போது கடையில் இருந்த நபர் அலட்சியமாக பதில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் பேக்கரியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் வந்து பிறந்தநாளு வெட்டப்பட்ட கேக்கை ஆய்வு செய்து அந்தக் கேக் கெட்டுப்போனதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் பேக்கரி மற்றும் அதன் அருகில் உள்ள பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த போராட்டத்தினால் பஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்