திருவட்டார் அருகே குளித்த போது ஆற்று வெள்ளத்தில் பெண் அடித்து செல்லப்பட்டார்

திருவட்டார் அருகே குளித்த போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2022-11-10 19:53 GMT

திருவட்டார், 

திருவட்டார் அருகே குளித்த போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

குளிக்க சென்ற பெண்

திருவட்டார் அருகே உள்ள பாரத பள்ளி மடத்துவிளையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி புஷ்பபாய் (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று மதியம் இவர் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்றார். அங்கு துணியை துவைத்து விட்டு குளித்து விட்டு வருவதாக குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆற்று பகுதிக்கு சென்றனர். அங்கு கரையில் புஷ்பபாய் கொண்டு சென்ற பக்கெட் மற்றும் துணிகள் இருந்தன. ஆனால் அவரை காணவில்லை.

ஆற்றில் அடித்து செல்லப்பட்டார்

குளித்த போது புஷ்பபாய் ஆற்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரை தேடியும் புஷ்பபாயை கண்டு பிடிக்கவில்லை. இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மீண்டும் தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்று வெள்ளத்தில் பெண் அடித்து செல்லப்பட்ட சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்