நல்லம்பள்ளி அருகே14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தெருக்கூத்து கலைஞர்கள் 3 பேர் கைது

Update: 2023-06-10 19:30 GMT

தர்மபுரி: 

நல்லம்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக தெருக்கூத்து கலைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி பாலியல் பலாத்காரம்

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வந்தார். தாயார் இல்லாததால் தனது தந்தையுடன் சிறுமி வசித்து வந்தார். தற்போது கோடை விடுமுறை என்பதால் மாணவி வீட்டில் இருந்துள்ளார். கடந்த மே மாதம் 25- ந்தேதி இரவு சிறுமியின் ஊரில் மழை வேண்டி அர்ஜூனன் தபசு தெருக்கூத்து நடந்துள்ளது.

அப்போது, தெருக்கூத்து கலைஞர்களான சொக்கனேரியை சேர்ந்த கொல்லாபுரி (வயது65), பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (48), மஞ்சுநாதன் (33) ஆகியோர் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்த சிறுமியின் வாயை பொத்தி அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமிக்கு 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இதனால் அந்த சிறுமி அச்சமடைந்து உள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது பற்றி தர்மபுரி சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த கொல்லாபுரி, மணிகண்டன், மஞ்சுநாதன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். 

மேலும் செய்திகள்