திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஊர் குளத்தான்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் ராகினி (வயது 4). சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது பெரியப்பா வேலு வீட்டிற்கு சிறுமி சென்றாள். அப்போது அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்று வெறி நாய் கடித்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நாய் சிறுமி ராகினியை கடித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராகினி சோர்வுடன் இருந்ததை கண்ட அவளது பெற்றோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் நாய் கடித்ததை அவர்கள் கூறியதை அடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராகினி பரிதாபமாக இறந்தாள்.