கியாஸ் சிலிண்டர் வெடித்து சமையலறை இடிந்தது

மார்த்தாண்டம் அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

Update: 2023-07-05 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள்ளவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

கொத்தனார் வீடு

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு முண்டவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது40). இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இவருக்கு விஜிலா (35) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் முண்டவிளையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இவர்களது வீட்டின் பின்பகுதில் ஒரு சமையல் அறையும், அதன் அருகே தனியாக மற்றொரு சமையலறையும் உள்ளது. இவர்களுக்கு 2 கியாஸ் சிலிண்டர்கள் உள்ளதால் ஒரு சிலிண்டரை தனியாக இருந்த சமையல் அறையில் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் விஜிலா வீட்டின் முன்பக்கம் அமர்ந்திருந்தார். அவருடைய 2 குழந்தைகளும் பள்ளிக்கூடம் சென்றிருந்தனர்.

கியாஸ் சிலிண்டர் வெடித்தது

அப்போது பின்பக்க சமையல் அறையில் இருந்து வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. உடனே விஜிலா அலறி அடித்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம் ஓடி சென்றார். அப்போது, பின்பக்கம் தனியாக இருந்த சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

மேலும் சமையலறை சுவர்இடிந்து விழுந்து கிடந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க தொடங்கினர். மேலும் மார்த்தாண்டம் போலீசாரும், குழித்துறை தீயணைப்பு நிலையத்தாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முழுமையாக அணைத்தனர்.

விபத்து நடந்த போது விஜிலா வீட்டின் முன் பகுதியில் இருந்ததாலும், குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்ததாலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்