வீடுகளின் கதவை தட்டி கொள்ளையடிக்க முயன்ற கும்பல்

விழுப்புரத்தில் நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. மேலும் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது.

Update: 2023-01-14 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி. நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அப்பகுதிகளில் இருந்த சில வீடுகளின் கதவைத்தட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளனர்.

அப்போது வீட்டின் உரிமையாளர்கள் மின்விளக்கை போட்டபடி வெளியே வந்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பதறிப்போய் தப்பியோடி விட்டனர். இதுதவிர சில இடங்களில் தெருவில் வந்த பொதுமக்களை அந்த கும்பல் கத்தியைக்காட்டி மிரட்டி நகை, பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அவர்கள் கூச்சல்போடவே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

இந்த கொள்ளை கும்பலின் அட்டகாசத்தினால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த சில சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்ததோடு அதில் பதிவாகியிருந்த சில மர்ம நபர்களின் அடையாளத்தை கொண்டு அவர்கள் யார், எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்