நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்ற கும்பல்

திருவெறும்பூர் அருகே சீட்டு விளையாட்டில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர்.

Update: 2022-09-04 19:46 GMT

திருவெறும்பூர்,செப்.4-

திருவெறும்பூர் அருகே சீட்டு விளையாட்டில் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி பணத்தை பறிக்க முயன்றனர்.

சீட்டாடிய பணம்

திருவெறும்பூர் அருகே உள்ள சின்னசூரி பகுதியை சேர்ந்தவர் ஆர்.எஸ்.ஆர். ரமேஷ். இவரது ஆதரவாளர்களுக்கும், திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த பப்ளு ஆதரவாளர்களுக்கும் இடையே சீட்டாடிய பணத்தை பிரித்து கொள்வதில் பிரச்சினை இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு ஆர்.எஸ்.ஆர். ரமேஷின் பனந்தோப்பில் வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த பப்ளு தரப்பினர் 10-க்கும் மேற்பட்டவர்கள் ரமேஷ் தரப்பினரிடம் சீட்டாடிய பணத்தை பறித்து செல்ல முயன்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

நாட்டு வெடிகுண்டு

இந்த மோதலில் ஒருதரப்பினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். மேலும் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியை சேர்ந்த தக்காளி மண்டி உரிமையாளர் தீன் (வயது 35) என்பவரை அரிவாளால் வெட்டினர். நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் தீனின் நெஞ்சில் காயம் ஏற்பட்டது. உறையூரை சேர்ந்த அரவிந்த் (27) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

பல லட்சம் பணம்

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, நவல்பட்டு போலீஸ் சரகத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடும் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்த விளையாட்டில் பல லட்சம் பணம் புரள்கிறது. தற்போது, நடைபெற்ற மோதலால் சீட்டு விளையாட்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபோல பல குற்றச்சம்பவங்கள் இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்