நடுக்கடலில் மர்ம மூட்டை வீசிய கும்பல் - கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை

கடலில் வீசியது தங்கமா? அல்லது போதைப்பொருளா? என்பதைக் கண்டறிய கடற்படை அதிகாரிகள் கடலில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.;

Update: 2023-02-08 09:23 GMT

ராமநாதபுரம்,

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் இந்திய கடற்படையினருக்கும், தமிழக கடலோர காவல் படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இன்று அதிகாலை 5 மணி முதலே தமிழக கடலோர எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லையில் இருந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது இலங்கையில் இருந்து தமிழ்நாடு நோக்கி நாட்டுப் படகு ஒன்று வந்துள்ளது. அதிகாரிகள் அதனை நிறுத்த முயன்ற போது, அந்த படகு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அந்த படகை கடற்படை அதிகாரிகள் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த நாட்டுப் படகில் இருந்த நபர்கள் ஒரு மர்ம மூட்டையை கடலில் வீசிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து அந்த படகை துரத்திப் பிடித்த அதிகாரிகள், அதில் இருந்த நபர்களை கரைக்கு கொண்டு விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் அந்த நபர்கள் கடலில் வீசியது தங்கமா? அல்லது போதைப்பொருளா? என்பதைக் கண்டறிய கடற்படை அதிகாரிகள் கடலில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், போதைப்பொருள் ஆகியவை அதிக அளவில் கடத்தப்படுவதாகவும், இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே கடலில் வீசிய மர்ம மூட்டையை கண்டறிந்த பிறகு தான் அது தங்கமா அல்லது போதைப்பொருளா என்பது தெரியவரும்.

சிலிண்டர் பொருத்தி ஆழ்கடலில் மூழ்கி தேடும் நபர்களைக் கொண்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் அந்த மர்ம பொருள் தேடி கண்டுபிடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்