கொத்து புரோட்டா இல்லை என்றதால் மாஸ்டருக்கு 'குத்து' விட்ட கும்பல்; வத்தலக்குண்டுவில் பரபரப்பு

வத்தலக்குண்டு ஓட்டலில், கொத்து புரோட்டா இல்லை என்றதால் மாஸ்டரை அடித்து உதைத்த 6 பேர் கும்பலை போலீசார் ேதடி வருகின்றனர்.

Update: 2023-09-18 21:15 GMT

வத்தலக்குண்டு ஓட்டலில், கொத்து புரோட்டா இல்லை என்றதால் மாஸ்டரை அடித்து உதைத்த 6 பேர் கும்பலை போலீசார் ேதடி வருகின்றனர்.

கொத்து புரோட்டா கேட்டு...

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில், பெரியகுளம் சாலையில் டாஸ்மாக் கடை அருகே ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு, நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் 6 பேர் உணவு சாப்பிடுவதற்காக வந்தனர். அப்போது அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொத்து புரோட்டா கேட்டனர்.

ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த மாஸ்டர் முத்து (வயது 24), கொத்து புரோட்டா இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

மாஸ்டருக்கு 'குத்து'

புரோட்டா இல்லையென்றால் ஏன் ஓட்டல் நடத்துகின்றீர்கள் என்று கூறி, முத்துவிடம் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர்கள், முத்துவின் முகத்தில் குத்து விட்டனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் ஓட்டலில் இருந்த நாற்காலிகள், பாத்திரங்கள், உணவு பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் ஓட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த மாஸ்டர் முத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, வத்தலக்குண்டுவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரலாகும் வீடியோ

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில், ஓட்டல் மேலாளர் முகமது யாசிக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலுக்குள் புகுந்து மாஸ்டரை தாக்கிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மாஸ்டரை தாக்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் வத்தலக்குண்டுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்