மண்ணடியில் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டி வாலிபரை கடத்திய கும்பல் - லாட்ஜில் பதுங்கிய 4 பேரை போலீசார் சுற்றிவளைப்பு
மண்ணடியில் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டி வாலிபரை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.;
ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் தர்கா தெருவை சேர்ந்தவர். கலீலர் ரஹ்மான். இவரது மகன்கள் நூருல் ஹக் (வயது 26), ஷேக் மீரான் (22) ஆகியோர் ஆவர். இருவரும் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கலீலர் ரஹ்மான் சமீபத்தில் சென்னைக்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை மண்ணடி அங்கப்பன் நாயக்கன் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஷேக் மீரானை மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்திச் சென்றனர். பின்னர் கடத்தல் கும்பல் அவரது சகோதரர் நூருல் ஹக்கினை செல்போனில் தொடர்பு கொண்டு, ரூ.40 லட்சத்தை கொடுத்து ஷேக் மீரானை மீட்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலீலர் ரஹ்மான் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தியதில், ஷேக் மீரானை மண்ணடி முத்து மாரி செட்டி தெருவில் ஒரு தனியார் லாட்ஜில் அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கடத்தல் கும்பலை சேர்ந்த சென்னை மண்ணடி முத்துமாரி செட்டி தெருவை சேர்ந்த முகமது ராவுத்தர் (45), முகமது ரிபாய்தின் (25) உள்பட 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்து ஷேக் மீரானை மீட்டனர். மேலும் விசாரணை நடத்தியதில் கலீலர் ரஹ்மான் மற்றும் அவரது மூத்த மகன் நூருல் ஹக் ஆகியோர் கடத்தல் கும்பலிடம் ரூ.40 லட்சம் கடனான வாங்கியதும், அதை தராத ஆத்திரத்தில் ஷேக்மீரானை கடத்தி சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.