வாலிபரை கொன்று முகத்தை சிதைத்த கும்பல்

பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க வந்த அவருடைய நண்பருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.

Update: 2023-09-17 18:45 GMT

பரமக்குடி

பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க வந்த அவருடைய நண்பருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.

மது போதையில்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா குமாரக்குறிச்சியை சேர்ந்தவர் ஹரிஷ் என்ற வாணி கருப்பு(வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் அபி பாலன்(21). இருவரும் நண்பர்கள். இவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து பரமக்குடி அடுத்த ஆற்று பாலம் பகுதியில் அவ்வப்போது மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கிடையே யார் பெரியவர்கள் என்ற பிரச்சினை கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹரிஷ், அபிபாலன் உள்ளிட்ட சிலர் ஒன்றாக சேர்ந்து ஆற்று பாலம் பகுதியில் மது குடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர். ஹரிஷ் மற்றும் அபிபாலன் இருவரும் ஆற்று பாலம் பகுதியில் நின்றிருந்தனர்.

வாலிபர் வெட்டிக்கொலை

அப்போது அங்கே வந்த ஒரு கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ஹரிசை சரமாரியாக வெட்டினர். மேலும் மதுபாட்டிலை உடைத்து ஹரிஷின் முகத்தில் குத்தி சிதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த ஹரிஷ் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இதை தடுக்க முயன்ற அபிபாலனையும் மதுபாட்டிலால் நெஞ்சில் குத்தினர். இதில் அவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். பின்பு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அபிபாலனை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் ஹரிஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து அபிபாலன் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சில வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் ஆற்றுப்பாலம், வைகை நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் பரமக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்