2 வாலிபர்களை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல்

கோவையில் கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்த 2 வாலிபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-12 22:15 GMT

கோவை

கோவையில் கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்த 2 வாலிபர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவையில் பட்டப்பகலில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோர்ட்டில் வழக்கு

கோவை காந்திமாநகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 22), டான்ஸ் மாஸ்டர். இவர் மீது சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் கஞ்சா, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது நண்பர் காந்திபுரம் 9-வது வீதியை சேர்ந்த நித்தீஷ் (24). இவர் மீது ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்தநிலையில் ரஞ்சித்குமார் மீதான பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அதுபோன்று நித்தீஷ் மீதான வழக்கு கோவையில் உள்ள இன்றியமையா பண்டங்கள் மற்றும் போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.

அரிவாள்களுடன் துரத்தினர்

இந்தநிலையில் நேற்று 2 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனால் கோர்ட்டில் ஆஜராக ரஞ்சித்குமார், நித்தீஷ் மற்றும் அவர்களின் நண்பரான ரத்தினபுரியை சேர்ந்த கார்த்திக் (23) ஆகியோர் காலையில் கோவை கோர்ட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் அவர்கள் வழக்குகள் தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பினர். 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ராம் நகரில் உள்ள ராமர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள்களுடன் அவர்களை திடீரென துரத்தியது.

சுற்றி வளைத்தனர்

இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் உள்பட 3 பேரும், அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். அவர்கள் ராம்நகரில் இருந்து சென்குப்தா வீதி அருகே சென்றபோது, அந்த கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது. இதனால் நிலைதடுமாறிய 3 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தனர்.

உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் இருந்து இறங்கி அவர்களை சுற்றி வளைத்தது. இதனால் கீழே விழுந்த 3 பேரும் எழுந்து தப்பி ஓடினார்கள். இருந்தபோதிலும் அந்த கும்பல் அவர்களை விடாமல் துரத்திச்சென்றது. இதில் கார்த்திக் தப்பி ஓடிவிட்டார். ஆனால் ரஞ்சித்குமார், நித்தீஷ் ஆகியோரை சுற்றி வளைத்த அந்த கும்பல் அரிவாள்களால் வெட்டியது.

2 பேருக்கு அரிவாள் வெட்டு

இதில் 2 பேருக்கும் கைகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் உயிருக்கு போராடினர். பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் 2 பேரை வெட்டியதை பார்த்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் அங்கு ஏராளமானோர் கூடினார்கள்.

பொதுமக்களை பார்த்ததும் அந்த கும்பல், 2 பேரையும் வெட்டுவதை நிறுத்திவிட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பிச்சென்றது. இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அவர்கள் காயத்துடன் இருந்த ரஞ்சித்குமார், நித்தீஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அங்கு ரஞ்சித்குமார், நித்தீஷ் ஆகியோரின் செருப்புகள், அவர்கள் அணிந்து வந்த தொப்பிகள் ஆகியவை சிதறி கிடந்தன. அத்துடன் அந்த பகுதியில் ரத்தமும் படிந்து இருந்தது. உடனே போலீசார் அதன் மீது மண்ணை தூவினார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

2 தனிப்படை அமைப்பு

கோர்ட்டில் வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. எனவே, முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து உள்ளதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரும் முகமூடி அணிந்து இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே, தப்பியோடிய 6 பேரையும் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரவுடிகளின் அட்டகாசம்

கோவையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த கோகுல் (22) என்பவரை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றது. பட்டப்பகலில் கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

இதைதொடர்ந்து இந்த வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டும் பிடித்தனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து ரவுடிகளாக வலம் வந்த 60-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஓரளவு ரவுடிகளின் அட்டகாசம் குறைந்தது.

கடும் நடவடிக்கை

இந்த நிலையில் மீண்டும் நேற்று கோவை ராம் நகரில் 6 பேர் கொண்ட கும்பல் 2 பேரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் வெட்டுக்காயங்கள் அடைந்த ரஞ்சித்குமார், நித்தீஷ் ஆகியோர் மீது கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கோகுல் கொலை சம்பவத்துக்கு பழிவாங்க இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே மீண்டும் ரவுடிகளின் அட்டகாசம் தொடருவதற்கு முன்பு அவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்