தோட்டத்தில் புகுந்து 400 வாழை மரங்கள், பாக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்த கும்பல்

தோட்டத்தில் புகுந்து 400 வாழை மரங்கள், பாக்கு மரக்கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்தால் பதற்றம் நிலவுதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2023-05-18 21:45 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் உண்மை கொலையாளிகளை கண்டுபிடித்து கைது செய்யக்கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி உள்ள குடியிருப்புகள், வாகனங்களுக்கு தீ வைப்பது, பெட்ரோல் மற்றும் மண்எண்ணெய் குண்டுகள் வீசுவது போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்து வந்தன.

தீ வைப்பு

கடந்த 13-ந்தேதி ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகையில் வேலை செய்த வடமாநில வாலிபர்கள் அங்குள்ள அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த அறையை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், 4 வாலிபர்கள் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இதில் ஒருவர் இறந்தார். மற்றவர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்பகுதியில் நடந்து வரும் தொடர் அசம்பாவித சம்பவங்கள் காரணமாக 600-க்கும் மேற்பட்ட போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் 4 ஜீப்புகளில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு

இந்தநிலையில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்குமரக்கன்றுகளை மர்மநபர்கள் வெட்டி சாய்த்துள்ளனர்.

இதுபற்றி ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முருகேசன் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த ஆலை கொட்டகையின் உரிமையாளர் முத்துசாமியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

400-க்கும் மேற்பட்ட வாழை, பாக்குமரக்கன்றுகளை மர்மநபர்கள் வெட்டி சாய்த்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்