கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்து தாக்கிய கும்பல்
கடலூர் அருகே கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடுவீரப்பட்டு:
கடலூர் அருகே உள்ள பாலூர் சன்னியாசிப்பேட்டையை சேர்ந்த இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஒரு கும்பல் உருட்டு கட்டை, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆதங்களுடன் சன்னியாசிபேட்டைக்குள் புகுந்தது.
அங்குள்ள வீடுகள் மீது கற்களை வீசியும், உருட்டு கட்டையாலும் அந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த சமயத்தில் தெருக்களில் நின்றுகொண்டிருந்த கிராம மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்து கதவுகளை உள்புறமாக பூட்டிக்கொண்டனர். இருப்பினும் விடாத அந்த கும்பல், ஆயுதங்களால் வீடுகளின் கதவுகளை பலமாக தட்டியது. இதனால் அச்சமடைந்த வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
3 பேர் காயம்
இருப்பினும் அந்த கும்பல் தாக்கியதில் வீட்டின் ஓடுகள், டிராக்டர் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. மேலும் அதே பகுதியில் இருந்த பா.ம.க. பேனரும் கிழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் சரவணன், சிவக்குமார் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
முற்றுகை
இதனிடையே தகவல் அறிந்ததும் பா.ம.க. மாவட்ட தலைவர்கள் தடா.தட்சிணாமூர்த்தி, நவீன் பிரதாப் மற்றும் நிர்வாகிகள் திரண்டு வந்து, கிராமத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி போலீசாரை முற்றுகையிட்டனர். அதற்கு போலீசார், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக புகார் கொடுத்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் சன்னியாசிப்பேட்டை மற்றும் குயிலாப்பாளையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.