சென்னிமலை அருகே தொடரும் அட்டகாசம்:அணையின் நீர்த்தேக்க பகுதியில் பதுங்கியிருந்து ஆடுகளை வேட்டையாடும் நரிகள்நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சென்னிமலை அருகே அணையின் நீர்த்தேக்க பகுதியில் பதுங்கியிருந்து ஆடுகளை நரிகள் வேட்டையாடுகின்றன.

Update: 2023-05-08 22:01 GMT

சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை நீர்த்தேக்க பகுதியில் பதுங்கியிருந்து நரிகள் ஆடுகளை வேட்டையாடி வருகின்றன. இதனால் நீர்த்தேக்க பகுதியில் வளர்ந்துள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடுகளை கொல்லும் நரிகள்

சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ளது கொடுமணல் கிராமம். இந்த பகுதியில் திருப்பூர் சாயக்கழிவுகளால் நீர் நிலைகள் முற்றிலும் மாசுபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அதிக அளவில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். ஒரத்துப்பாளையம் அணையின் நீர்த்தேக்க பகுதிக்குள் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து விட்டதால் புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால் அங்கு ஏராளமான நரிகள் பதுங்கியுள்ளன. இவை அணையில் மீன்களை உண்டு ஒவ்வாமை காரணமாக அவற்றை நீர்நிலையிலேயே வாந்தி எடுத்து வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் புதர்களில் இருந்து வெளியேறி அருகே தோட்டங்களில் உள்ள ஆட்டு பட்டிக்குள் புகுந்து அங்கு கட்டப்பட்டிருக்கும் ஆடுகளை வேட்டையாடி வருகின்றன.

விவசாயிகள் அச்சம்

இதுவரை கொடுமணல் பகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை நரிகள் கடித்து கொன்று விட்டன. இங்குள்ள விவசாயிகள் அதிக அளவில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை தான் வளர்த்து வருகின்றனர். சமீப காலமாக இந்த ஆடுகளை நரிகள் கடித்து கொன்று வருவதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

கொடுமணல் தெற்கு ஆத்துத்தோட்டம் பகுதியில் வசிக்கும் விவசாயி பழனிசாமி என்பவர் 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இதில் 8 ஆடுகளை நரி கடித்ததில் 7 ஆடுகள் செத்து விட்டன. அதேபோல் சின்னச்சாமி என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும், சுப்பிரமணியம் என்பவரின் 4 வெள்ளாடுகளையும், வடக்கால தோட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் 2 ஆடுகளையும், குப்பிச்சாந்தோட்டத்தை சேர்ந்த காளியாத்தாள் என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும், சாம்பக்காட்டு தோட்டத்தை சேர்ந்த பழனி குப்புசாமி என்பவரின் 2 செம்மறி ஆடுகளையும் நரிகள் கடித்து கொன்று விட்டன.

முட்செடிகள்

அதுமட்டுமில்லாமல் ஒரத்துப்பாளையம் அணையின் மறுபகுதியான திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தம்மரெட்டிபாளையம், ராமக்காரன்பாளையம், புதூர், கணபதிபாளையம், காத்தாங்கண்ணி ஆகிய ஊர்களிலும் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த நரிகள் கொன்று குவிந்துள்ளன.

அணையின் நீர்த்தேக்க பகுதியான நொய்யல் ஆற்றில் முட்செடிகள் அதிக அளவில் இருப்பதால் நரிகளுக்கு வசதியாக போய்விட்டது. இங்கு ஏராளமான மான்களும் உள்ளன. இந்த நரிகளால் அந்த மான்களுக்கும் ஆபத்து ஏற்படும். அதனால் நொய்யல் ஆற்றுக்குள் உள்ள முட்செடிகளை முற்றிலுமாக அகற்றுவதுடன், தொடர் அட்டகாசத்தில் ஈடுபடும் நரிகளை பிடித்து செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பாதுகாக்க வேண்டும்

கொடுமணல் ஊர்வழி தோட்டத்தை சேர்ந்த விவசாயி எம்.நடராஜ்:-

நாங்கள் மாடுகள் வளர்த்து வருகிறோம். மாடுகளை ஆற்றுப்பகுதியில் மேய்ப்பதற்காக கொண்டு சென்ற போது இரு முறை நரியை பார்த்துள்ளேன். மாடுகளை கண்டால் பயந்து கொண்டு மாடுகளிடம் நரிகள் செல்வதில்லை.

ஆனால் ஆடுகளை கண்டால் மட்டும் விடவே விடாது. பல ஆண்டுகளுக்கு முன்பு தான் கிராமப்புறங்களில் நரிகள் இருந்தன. தற்போது எங்கிருந்து இந்த நரிகள் வந்தன என தெரியவில்லை. நரிகளிடமிருந்து ஆடுகளை பாதுகாக்க உடனடியாக நொய்யல் ஆற்றில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும்.

புள்ளி மான்கள்

கொடுமணல் குப்பிச்சாந்தோட்டத்தை சேர்ந்த காளியாத்தாள்:-

எங்களின் 2 செம்மறி ஆடுகளை நரிகள் கடித்து கொன்று விட்டன. நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் பல ஏக்கர் அளவுக்கு முட்செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிப்பதால் அங்கு வசிக்க நரிகளுக்கு வசதியாக போய்விட்டது. இந்த நரிகள் இரவு நேரங்களில் தான் ஆட்டுப்பட்டிக்கு சென்று ஆடுகளை கடித்து கொன்று விடுகின்றன.

இந்த பகுதியில் புள்ளி மான்களும் நிறைய சுற்றுகின்றன. அதனால் இந்த மான்களையும், ஆடுகளையும் பாதுகாக்க நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள முட்புதர்களை அகற்றுவதுடன் நரிகளை பிடிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாயக்கழிவுநீரால் பாதிப்பு

கொடுமணல் வடக்கால தோட்டத்தை சேர்ந்த சி.சரஸ்வதி:-

எங்களின் 2 செம்மறி ஆடுகளை நரி கடித்து கொன்று உள்ளது. அதேபோல் நொய்யல் ஆற்றங்கரையில் இருபுறமும் இதுவரை சுமார் 40 ஆடுகளை நரிகள் கொன்றுள்ளன. ஆடுகளின் சதைப்பகுதியை தான் இந்த நரிகள் குறிவைத்து கடித்து தின்றுள்ளன. எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஏற்கனவே திருப்பூர் சாயக்கழிவு நீரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் விவசாயம் செய்ய முடியாமல் பெரும்பாலும் ஆடுகளை வளர்த்து வருகிறோம். இந்த ஆடுகளை நரிகள் கடித்து கொன்று விடுவதால் ஆடுகள் வளர்ப்பதற்கும் பயமாக உள்ளது. அதனால் முதல் கட்டமாக நொய்யல் ஆற்றில் உள்ள முட்செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்