கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொல்லும் புலியை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை
கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொல்லும் புலி
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் வெளியேறும் புலி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேசன் நகர் பகுதியை சேர்ந்த விவசாயியான நாகமணி என்பவரின் பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனகோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா மற்றும் வனச்சரகர் சதீஷ் ஆகியோர் இறந்த பசு மாட்டுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிக்கு வழங்கினர். அந்த கிராமம் கர்நாடக வனப்பகுதியையொட்டி உள்ளது.
இதனால் கர்நாடக வனத்துறையினர் மற்றும் தமிழ்நாடு வனத்துறையினர் ஆகியோர் ஒன்று இணைந்து புலியை தீவிரமாக கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.