ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: மத உணர்வைத் தூண்டி ஆதாயம் தேட நினைக்கும் சக்திகளை ஒதுக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

மத உணர்வைத் தூண்டி ஆதாயம் தேட நினைக்கும்‌ சக்திகளை ஒதுக்கித் தள்ள வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2023-09-13 13:54 GMT

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சி விவாதப் பொருளாகியுள்ளதைப் பயன்படுத்திக் கொண்டு பாஜகவினர் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய நிகழ்ச்சியில், பங்கேற்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில், அங்கு ஏற்பட்ட சிரமங்கள் விவாதப் பொருளாகியுள்ளன. இப்பிரச்சனையில் குறைகளுக்கு தீர்வுகாண்பது அவசியம். புகார்களை கேட்டு அரசும் சில நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது, அது அவசியமானது.

ஆனால் இதுதான் வாய்ப்பு என பயன்படுத்திக் கொண்டு பாஜகவினர் வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். தமிழ் நாட்டுக்கும், இந்திய இசைக்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்தவர் ஏ.ஆர்.ரகுமான். இன்றும் இசைத்துறையில் பல புதுமைகளைப் படைத்து வருகிறார்.

ஆனால் அவரை மதம் குறிப்பிட்டு மலினப்படுத்தும் வேலையை பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தொடங்கினார். அதே போக்கில் அக்கட்சியினர் பலரும் வெறுப்பை முன்னெடுக்கின்றனர். இந்த அநாகரீகமான அரசியல் கண்டிக்கத்தக்கது. மத உணர்வைத் தூண்டி ஆதாயம் தேட நினைக்கும் சக்திகளை ஒதுக்கித் தள்ள வேண்டும். தமிழ்நாடு அரசாங்கம் இந்த சக்திகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்