சிதம்பரம் அருகே மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட வெள்ளம்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.

Update: 2022-10-20 18:45 GMT

அண்ணாமலைநகர், 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு, கடந்த சில தினங்களாக கொள்ளிடம் ஆற்றின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரையோரம் உள்ள பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு லட்சம் கன அடி தண்ணீராக குறைந்தது. இதனால் சிதம்பரம் அருகே கொள்ளிடக்கரையோர கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் நேற்று தண்ணீர் வடிய தொடங்கி உள்ளது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அதே நேரத்தில் பழைய கொள்ளிடம் ஆற்றையொட்டி உள்ள மடத்தான்தோப்பு பகுதியில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், அவை அழுகும் நிலை உள்ளது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக மடத்தான்தோப்பு பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ளநீா், மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் சங்கர், பெராம்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் சிவாஜி ஆகியோர் மேற்பார்வையில் அருகில் உள்ள கிராம மக்கள் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்