தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற வெள்ளம்

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பரளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2022-11-06 21:18 GMT

திருவட்டார்:

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பரளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று திருவட்டார், திருவரம்பு, பேச்சிப்பாறை, கோதையார், சிற்றார், மணலோடை, சுருளகோடு, ஆலஞ்சோலை, திற்பரப்பு, களியல், நெட்டா போன்ற பகுதிகளிலும் மலையோர பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறு என அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

போக்குவரத்து துண்டிப்பு

மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ்பகுதியில் பரளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால், மாத்தூரில் இருந்து பொன்னன்சிட்டி விளை, முதலார் போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மழைக்காலங்களில் இந்த தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து தடை படுவதால் இந்த இடத்தில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் தொட்டிப்பாலத்தின் கீழே பரளியாற்றில் குளிக்க இறங்கிய 2 ேபர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதையடுத்து அருவிக்கரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்காதவாறு எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் பொதுமக்கள்

திருவட்டாரில் இருந்து இடுகாட்டுப்பாதை வழியாக செம்பிறாவிளைக்கு செல்லும் பாதையை பரளியாற்று வெள்ளம் மூழ்கடித்த படி செல்கிறது. இதனால், இந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. திருவட்டாரில் இருந்து செம்பிறாவிளைக்கு செல்லும் பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதுபோல் பரளியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிக்கரை அணைக்கட்டிலும் வெள்ளம் மறுகாலிட்டு பாய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்