நொச்சிக்குப்பம் கடற்கரை அணுகு சாலை பகுதியை மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க முதல்-அமைச்சரிடம் கிராம நிர்வாகிகள் கோரிக்கை

நொச்சிக்குப்பம்-சீனிவாசபுரம் கடற்கரை அணுகு சாலை பகுதியை மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என முதல்-அமைச்சரை சந்தித்த மீனவ கிராம நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-04-22 21:16 GMT

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள அணுகு சாலையில் அமைந்துள்ள மீன் கடைகளை அகற்றுவது தொடர்பான பிரச்சினை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசியிருந்தார். இதற்காக நொச்சிக்குப்பம் மீனவ கிராமசபை தலைவர் ரூபேஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் ரவி, கு.பாரதி, அன்புரோஸ், கபடி மாறன், ஜெ.கோசுமணி, மகேஷ் உள்ளிட்டோர் நேற்று அமைச்சர் மா.சுப்பிரமணியனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த நொச்சிக்குப்ப மீனவ கிராம சபை நிர்வாகிகள் முதல்-அமைச்சரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. தா.வேலு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பாதுகாப்பு மண்டலமாக...

இந்த சந்திப்பின் போது நொச்சிக்குப்பம் கிராம நிர்வாகிகள் முதல்-அமைச்சரிடம் 2 மனுக்களை அளித்தனர். அவற்றில் ஒரு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள மீனவ கிராமங்களை இணைக்கும் கடற்கரையில் காலம் காலமாக மீன்பிடி தொழில் செய்து வந்த மீனவ மக்களிடம் இருந்து நிலத்தை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் எடுத்துக் கொண்டு மீனவ மக்களுக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தது. மேலும், நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் கடற்கரை இணைப்பு சாலையை அமைத்து, மீதமுள்ள இடங்களில் மீனவ மக்களுக்கு தேவையான மீன் அங்காடிகள், சமூக நலக்கூடங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகம், பால்வாடி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராமல் மீனவ மக்களின் பொது பயன்பாட்டு இடங்களை பல்வேறு துறைகளுக்கு தொடர்ந்து ஒதுக்கி வருகிறது.

எனவே, நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள மீனவ மக்கள் மீன்பிடி தொழில், மீன் வியாபாரம் மற்றும் மீனவர்களின் குடியிருப்பு ஆகியவற்றுக்காக பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் மெரினா கடற்கரை அணுகு சாலை உள்ளடக்கிய பகுதியை மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

சாந்தோம் சாலையை விரிவுபடுத்த வேண்டும்

பாரம்பரிய மீனவ மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க, கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பாணை 2011 பிரிவு 5-ன் உட்பிரிவுகளின் கீழ் தயாரிக்கப்படும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் மற்றும் வரைபடத்தில், பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி தொழில், மீன் வியாபாரம் செய்யும் இடங்கள், படகுகளை நிறுத்தும் இடங்கள், கடலில் மீன்பிடி தொழில் செய்யும் இடங்கள், மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் போன்றவற்றை அறிவியல் ரீதியாக ஜி.ஐ.எஸ் முறையில் வரைபடம் தயாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு 2020-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பு இன்று வரை அமல்படுத்தப்படாமல் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமை அரசின் திட்டங்களாலும், அதிகாரிகளாலும் பறிக்கப்படுகிறது.

எனவே, மேற்கண்ட ஐகோர்ட்டு தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தி, நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை உள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கேட்டுக் கொள்கிறோம். சாந்தோம் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி போக்குவரத்து நெரிசலுக்கான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்