இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது மீன்பிடி தடை காலம்...!

தமிழகக்கடலோர பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.

Update: 2023-04-14 08:23 GMT

சென்னை,

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ், தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில்கொண்டு மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் குறிப்பிட்ட காலத்துக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி, கிழக்குக்கடற்கரை எல்லையான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்குக்கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை (61 நாட்கள்) மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் காலக்கட்டத்தில் பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மீன்பிடி தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிசாமி கூறியதாவது:-

ஏப்ரல் 15-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 14-ந்தேதி வரையிலான 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆகும். மேற்கண்ட காலத்தில் தமிழகக்கடலோரப் பகுதிகளில் இருந்து விசைப்படகுகள், இழுவைப்படகுகள் கடலுக்குள் செல்லக்கூடாது.

எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் தமிழக எல்லையில் இருந்து ஆந்திர மாநில கடல்பகுதிக்கு செல்லக்கூடாது. தடையை மீறி மீன்பிடிக்கச்சென்று, அதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மீனவர் சங்கங்களே பொறுப்பேற்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புப்பலகைகளை அனைத்து மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்களிலும் நிறுவிடவேண்டும்.

படகுகள் கரை திரும்ப உத்தரவு எனவே மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு முன்பாக, கடலுக்குச்சென்ற மீன்பிடி விசைப்படகுகள் 14-ந்தேதி (இன்று) இரவு 12 மணிக்குள் கட்டாயம் கரை திரும்பவேண்டும். ஆழ்கடல் பகுதிக்கு சென்றிருப்போருக்கு உரிய தகவல்கள் அளித்து கரை திரும்பிட ஏற்பாடு செய்திடவேண்டும்.

மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த பின்பு, அதாவது 14-ந்தேதி இரவு 12 மணிக்கு பிறகு கரைக்கு திரும்பும் மீன்பிடி விசைப்படகுகள் விவரங்கள் உடனடியாக தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படவேண்டும். கரைக்கு திரும்பாத படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்