நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

Update: 2023-06-07 20:38 GMT

திசையன்விளை:

தென் கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகி உள்ளது. இதனால் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் வருகிற 10-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜதுரை சார்பிலும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த தகவல் ஆலய ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் நெல்லை மாவட்டத்தில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதாவது உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், பஞ்சல், தோமையர்புரம், கூட்டப்புளி, ஜார்ஜ்நகர், மிக்கேல் நகர் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஏராளமான நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. எனினும் கடலில் வழக்கத்தைவிட அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. காற்றும் அதிவேகமாக வீசியது.

மேலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் நேற்று திசையன்விளை மீன் மார்க்கெட்டிற்கு வெளிமாவட்டத்தில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

மேலும் செய்திகள்