கடலில் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்
கொள்ளிடம் அருகே கடலில் மீன்பிடித்தபோது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மீனவர் மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே கடலில் மீன்பிடித்தபோது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மீனவர் மாயமானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன் குளம் ஊராட்சி கொட்டாய்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். மீனவரான இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள்(வயது 44), சூரியமூர்த்தி ஆகியோருடன் நேற்று காலை 6 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
இவர்கள், கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் படகு சிக்கி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
மீனவர் மாயம்
அப்போது படகில் இருந்த பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார். மற்ற இருவரும் கடலில் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். கரை சேர்ந்த மீனவர்கள் அளித்த தகவலின் பேரில் கடல் சார்ந்த மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் கடற்கரை போலீசார் விரைந்து வந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படை உதவியுடன் பெருமாளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேடும் பணியை தீவிரப்படுத்த...
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் வாசுதேவன், கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்ராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர் பெருமாள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி மாயமான மீனவரை தேடும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கரைக்கு வந்த இரண்டு மீனவர்களும் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயமான சம்பவம் கொட்டாய் மேடு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.