படிப்பை தவிர்த்து வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும்மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது முதல்பணிபுதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பேட்டி

படிப்பை தவிர்த்து பிற பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது முதல்பணி என்று புதிதாக பொறுப்பேற்ற முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் கூறினார்.

Update: 2023-05-08 18:45 GMT


விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கிருஷ்ணப்பிரியா கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ஆர்.அறிவழகன், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இவர் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புறங்களை அதிகம் கொண்ட பகுதியாகும். முதலில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பள்ளி வளாகங்களுக்கு கொண்டு வருவது முதல் வேலை. எந்தவொரு படிப்பையும் தவிர்த்து வேறு பணிகளில் ஈடுபடக்கூடாது. அதுபோன்று பணிகளில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பது எனது முதல்பணி. 2-வது 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும். முதலிடம் பெறுவது என்பதைவிட எந்தவொரு மாணவ- மாணவியும் தேர்ச்சி பெறாமல் இருக்கக்கூடாது.

ஏனென்றால் ஒரு மாணவன் தோல்வி அடைந்துவிட்டால் அவனது வாழ்க்கை பாதை தவறான பாதையாகி விடும். தேர்ச்சி பெற்று விட்டால் அவர்களின் பாதை நேர்பாதையாக சென்றுவிடும். ஆகவே வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும். அதேபோல் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவ- மாணவிகளுக்கு விடுபடாமல் கொண்டு சேர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சிறந்த நிலையை அடையும்

வரும் கல்வியாண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவது எனது முதல் பணி. இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை. வரும் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் ஒரு சிறந்த நிலையை அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், அலுவலக கண்காணிப்பாளர் கோகுலகண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்