தமிழகத்தில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.;

Update:2024-01-21 22:31 IST

கோப்புப்படம்

சென்னை,

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 16-ந் தேதி முடிவடைகிறது. 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்காக ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் 27-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலும் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இதில் ஆண்கள் 3 கோடியே 68 ஆயிரத்து 610 பேர் ஆவர். பெண்கள் 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 110 பேரும் அடங்குவர்.

இரட்டை பதிவு, இறப்பு போன்ற காரணங்களினால் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 94 ஆயிரத்து 985 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பல்வேறு தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரானது.

இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நாளை (திங்கட்கிழமை) பகல் 11 மணிக்கு வெளியிடுகிறார்.

அதேவேளையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்களிலும் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட கலெக்டர்கள் இதனை வெளியிடுகின்றனர்.

சென்னையை பொறுத்தமட்டில் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்