பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் - சீமான்

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-02-08 05:54 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திண்டுக்கல் மாவட்டம், தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனிமலை திருக்கோயில் அடிவாரத்தில் ஓடும் சண்முகா நதிக்கரையில் நிறுவப்பட்டிருந்த 24 அடி உயரமுள்ள உலோகத்திலான வேலினை தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக அகற்றியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு கடந்த பல ஆண்டுகளாக மக்கள் வழிபட தற்காலிகமாக நிறுவப்படுகின்ற வேலினை, இந்த ஆண்டு அனுமதி மறுத்து வலுக்கட்டாயமாக அகற்றியிருப்பது எதேச்சதிகாரப்போக்காகும். தமிழ்நாட்டில் எண்ணற்ற வடநாட்டு சாமிகளுக்கும், சாமியார்களுக்கும் சிலைகளும், கோயில்களும், மடங்களும் பல்லாயிரக்கணக்கில் நிறுவப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றாக தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் புதிதாகப் பொது இடங்களில் முளைத்தும் வருகின்றன. அவற்றை எல்லாம் மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்றுகூறி அகற்றவோ, நிறுவக்கூடாது என்று தடுக்கவோ திமுக அரசிற்குத் துணிவிருக்கிறதா?.

அவற்றையெல்லாம் எவ்வித வரையறையும் இன்றி அனுமதித்துவிட்டு, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனுக்காக சண்முகா நதிக்கரை ஓரத்தில் மெய்யன்பர்களால் தற்காலிகமாக வைக்கப்பட்ட வேலினை இரவோடு இரவாக அகற்றியது ஏன்? 60 ஆண்டுகள் ஆண்ட திராவிட ஆட்சியினாரால் ஏராளமான நீர்நிலைகளும், வழித்தடங்களும், பொது இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அவற்றையெல்லாம் மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, பொதுமக்கள் யாரும் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக புகார் தெரிவிக்காதபோது வேலினை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?.

தமிழர்களின் மெய்யியல் கூறுகளைத் திருடி தன்வயப்படுத்திய வடநாட்டு ஆரியர்களிடமிருந்து அவற்றை மீட்டுக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் செய்யாத திராவிட ஆட்சியாளர்கள், அவற்றை மூட நம்பிக்கை, முட்டாள்தனம் என்றெல்லாம் விமர்சித்து தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களையும், வழிபாட்டு முறைமைகளையும் ஆரியருக்குத் தாரைவார்த்தனர்.

அதுமட்டுமின்றி தமிழர் மெய்யியலையும், வழிபாட்டு முறைமைகளையும் தொடர்ந்து இழிவுபடுத்தியும் வருகின்றனர். அதன் நீட்சியாகவே தற்போது பழனியில் தற்காலிகமாக நிறுவப்பட்ட முருக வேலினை இரவோடு இரவாக அகற்றிய திமுக அரசின் அத்துமீறிய நடவடிக்கையாகும்.

கல் தோன்றி, மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்தகுடியான தமிழ்க்குடியின் வீரத்தின் அடையாளமாகவும், போர்க்கலையின் வடிவமாகவும் திகழ்வது வேலாகும். ஒவ்வொரு ஆண்டும் பழனிமலைக்கு வரும் மெய்யன்பர்கள் சண்முகா நதிக்கரையில் நிறுவப்படும் முருகனது வேலினை வணங்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வந்த நிலையில், அதனை திமுக அரசு அகற்றியது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே, தமிழ்நாடு அரசு மெய்யன்பர்களின் கோரிக்கையை ஏற்று பழனிமலை சண்முகா நதிக்கரையில் நிறுவப்பட்டிருந்த தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை அகற்றிய இடத்திலேயே நிரந்தரமாக நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்