பயிர்களை பாதுகாக்க இருபுறமும் வேலி அமைத்த விவசாயிகள்

சிங்கம்புணரி அருகே வனவிலங்குகளிடம் இருந்து நெல் பயிர்களை பாதுகாப்பதற்காக சாலையோரத்தில் உள்ள வயல்களின் இருபுறத்திலும் வலை கொண்டு விவசாயிகள் வேலி அமைத்துள்ளனர்.

Update: 2022-11-20 18:45 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே வனவிலங்குகளிடம் இருந்து நெல் பயிர்களை பாதுகாப்பதற்காக சாலையோரத்தில் உள்ள வயல்களின் இருபுறத்திலும் வலை கொண்டு விவசாயிகள் வேலி அமைத்துள்ளனர்.

தொடர் மழை

சிவகங்கை மாவட்டத்தில் இந்தாண்டு தொடக்கம் முதலே பருவ மழை தொடர்ந்து பெய்ததால் பல்வேறு கண்மாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழையும் தீவிரமடைந்ததால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது வயலில் விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கம்புணரி அருகே பிரான்மலை, வேங்கைப்பட்டி, கிருங்காங்கோட்டை, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது நெல், கடலை, பயிறு உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டு பாதுகாத்து வருகின்றனர்.

நெல் பயிர்

வேங்கைப்பட்டி சாலையின் இருபுறத்திலும் உள்ள வயல்களில் பல ஏக்கர் நெல் பயிர் பயிரிட்டு பாதுகாத்து வந்தனர். தற்போது அந்த பயிர்கள் கதிர் வரும் நிலையை எட்டியதால் விவசாயிகள் அதை பகல் மற்றும் இரவு நேரத்தில் ஆடு, மாடு மற்றும் காட்டு எருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டி சாலையின் இருபுறத்தில் உள்ள வயல்களின் வரப்பு ஓரத்தில் தற்காலிகமாக வலை கொண்டு வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் பகல் நேரங்களில் பறவைகளிடம் இருந்து நெல் கதிர்களை காப்பாற்ற விவசாயிகள் அங்கு சென்று சத்தமிட்டும், பட்டாசு வெடித்தும் பறவைகளை விரட்டி வருகின்றனர்.

வலை வேலி

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- தொடர்ந்து பெய்த மழையை பயன்டுத்தி முன்கூட்டியே குறுகிய கால நெல் பயிரை பயிரிட்டு பாதுகாத்து வருகிறோம். தற்போது இந்த பயிர்கள் கதிர் விடும் நிலையில் உள்ளது. இதனால் பறவைகள், காட்டு விலங்குகளிடம் இருந்து நெல் பயிரை பாதுகாக்க தற்காலிகமாக வயல் ஓரத்தில் பிளாஸ்டிக் வலை கொண்டு வேலி அமைத்துள்ளோம்.

உழவன் கணக்கு பார்த்தல் உழக்கு கூட மிஞ்சாது என்று சொல்வது போல் விவசாயிகளின் நிலை உள்ளது. இருப்பினும் விவசாயத்தை காப்பாற்றும் வகையில் தொடர்ந்து பாதுகாத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்