மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்

மாநில கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உயர்மட்ட குழு தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான முருகேசன் தெரிவித்தார்.

Update: 2022-11-04 16:06 GMT

மாநில கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உயர்மட்ட குழு தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான முருகேசன் தெரிவித்தார்.

கருத்துகேட்பு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்விக் கொள்கை குறித்து உயர்மட்ட குழுவினரின் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குழு தலைவரும், டெல்லி கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியுமான முருகேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் ஜவகர்நேசன், ராமானுஜம், சீனிவாசன், கல்வி ஆலோசகர் அருணா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேசியதாவது:-

பரிந்துரை செய்யப்படும்

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முன்மாதிரியாக தமிழகத்தில் கல்விக்கான தனிக் குழு அமைத்துள்ளனர். வேறு எங்கும் அமைக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. மாணவர்கள் அச்சம், தயக்கமின்றி தெரிவிக்கும் கருத்துகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மாவட்டங்களை 8 மண்டலங்களாக பிரித்து இதுவரை 6 மண்டலங்களில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 7-வதாக வேலூரில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.

நாளை (இன்று) சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மற்ற இடங்களில் நடந்த கூட்டத்தில் மாணவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் பின்னால் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தின் நோக்கமே மாணவர்களின் கருத்துகளை பெறுவது தான். எனவே மாணவர்கள் முன் வரிசையில் அமர்ந்து தங்கள் கருத்துகளை தாரளமாக தெரிவிக்க வேண்டும். அதுதான் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர் பலர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்