பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது-மதுரை மாநாட்டில் ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது என மதுரையில் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

Update: 2022-05-29 20:18 GMT

மதுரை,

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது என மதுரையில் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

செஞ்சட்டைப் பேரணி

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காளவாசல் பகுதியில் நேற்று செஞ்சட்டைப் பேரணியும், பழங்காநத்தம் பகுதியில் மாநாடும் நடைபெற்றது. தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் தலைமை தாங்கினார். தமிழ் புலிகள் கட்சி சிறுத்தை செல்வன் முன்னிலை வகித்தார். விடுதலை தமிழ் புலிகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் குடந்தை அரசன், மாநாட்டு மலரை வெளியிட, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் இளமாறன் பெற்றுக் கொண்டார்.

இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,

பெரு முதலாளிகளுக்கு

பா.ஜ.க. கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற யதேச்சதிகார போக்குடன் இயங்கி வருகிறது. மக்களை பற்றிய எந்த கவலைகளும் இல்லாமல் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இயங்கி வருகிறது. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறது.

1956-ல் மத்திய அரசின் நிதி ரூ.5 கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானம்

இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

சனாதனத்தின் நான்கு வர்ணங்களை எதிர்த்து, மூன்று வர்ணங்கள் தொடுக்கும் போர் மதுரை வீதிகளில் நடைபெற்று கொண்டிருக்கிறது. வர்ணங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான சாதிகள் அடங்கியுள்ளன. வர்ண ஆதிக்க எதிர்ப்பு என்றால் இந்துத்துவா எதிர்ப்பு என்று அர்த்தம். இந்தியாவில் ஆரிய இனம், திராவிட இனம் ஆகிய இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன என்றார்.

தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், மனித நேய மக்கள் கட்சி அப்துல்சமது, ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்