5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த விவசாயிக்கு உடல்நல குறைவு

5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த விவசாயிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.;

Update:2023-05-16 00:42 IST

க.பரமத்தி ஒன்றியம், ஆண்டி செட்டிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து 110 கிலோ வாட் மின்சாரத்தை உயர் மின் கோபுரம் மூலம் தென்னிலை மேல்பாகம் ஊராட்சி, கூனம்பட்டி கரைத்தோட்டம் வரை கொண்டு செல்வதற்கான பணிகளை மின்சார வாரியம் செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கரூர் மாவட்ட கலெக்டர், புகழூர் வட்டாட்சியர், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு என அனைத்து இடங்களுக்கும் சென்று மனுக்கள் கொடுத்து வந்தனர்.

இந்தநிலையில் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தென்னிலை மேற்கு ஊராட்சி, கூனம்பட்டி மூக்கணாந்தோட்டத்தில் விவசாயி ராஜா என்பவர் குடிசை அமைத்து கடந்த 11-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். க.பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் தினமும் அவரை பரிசோதித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று 5-வது நாளாக உண்ணாவிரம் இருந்து வந்தார்.

மாலை நேரத்தில் சுகாதாரத்துறையினர் ராஜாவை பரிசோதித்த போது அவரது உடலில் சர்க்கரை அளவு குறைந்து உடல்நல குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்