விக்கிரமங்கலம் அருகே தோட்டத்திற்கு சென்ற விவசாயிஅடித்துக்கொலையா?

விக்கிரமங்கலம் அருகே தோட்டத்திற்கு சென்ற விவசாயி மர்ம ஆசாமிகளால் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-04-21 20:02 GMT

விவசாயி சாவு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பெருமாள் தீனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி இளவரசி (48). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேகர் தனது தோட்டத்தில் கடலையை அறுவடை செய்து அதனை தோட்டத்தில் காய வைத்திருந்தார். இதைப்பாதுகாப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது ேதாட்டத்துக்கு சென்று வருவதாக சேகர், தனது மனைவியிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.

தோட்டத்துக்கு சென்ற சேகர் மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த இளவரசி நேற்று காலை கணவரை பார்ப்பதற்காக தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது சேகர் மற்றொரு விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலையா?

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக சேகரை மர்ம ஆசாமிகள் அடித்துக்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்