விவசாயி சரமாரி வெட்டிக்கொலை

வீரவநல்லூர் அருகே இடத்தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-08-20 21:11 GMT

அம்பை:

வீரவநல்லூர் அருகே இடத்தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவி மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயி

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் பஞ்சாயத்து கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்தவர் கஜேந்திர வரதன் என்ற கணேசன் (வயது 52). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவில் அத்தாளநல்லூரில் இருந்து உப்புவாணிமுத்தூருக்கு செல்லும் வளைவில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் திடீரென்று கணேசனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றது.

போலீசார் விசாரணை

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

இடத்தகராறு

கணேசன், அத்தாளநல்லூர் பஞ்சாயத்துக்கு சொந்தமான இடத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பஞ்சாயத்து தலைவி சிதம்பரத்தம்மாள் மகன் ராஜகோபால் (32) எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

பின்னர் கணேசன் அனுபவத்தில் இருந்த பஞ்சாயத்து இடம் மீட்கப்பட்டது. இதையடுத்து அந்த இடம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கணேசன் புகார் மனு அனுப்பி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கணேசனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் உயிரிழந்தார். இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக ராஜகோபால் மற்றும் அத்தாளநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வீரவநல்லூர் அருகே இடத்தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்