விவசாயி சரமாரி வெட்டிக்கொலை

நெல்லை அருகே சிறுமியை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update:2023-08-04 01:21 IST

பேட்டை:

நெல்லை அருகே சிறுமியை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

விவசாயி

நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி வ.உ.சி. நகர் 17-வது தெருவைச் சேர்ந்தவர் கொம்பையா (வயது 55), விவசாயி. இவரது மனைவி நல்லதாய். இவர்களது மகள்கள் செல்வமுப்பிடாதி, முருகேஸ்வரி (12).

கொம்பையா விவசாயம் செய்து வருவதுடன் கோழி, ஆடு, மாடுகளையும் வளர்த்து வந்தார்.

நாய் கடித்ததால் தகராறு

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கருத்தபாண்டி என்ற கண்ணன் (45). கட்டிட தொழிலாளியான இவர் தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி முருகேஸ்வரியை, கருத்தபாண்டி வளர்த்து வந்த நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கருத்தபாண்டிக்கும், கொம்பையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக ெகாம்பையா சுத்தமல்லி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்தனர். இதனால் கொம்பையா மீது கருத்தபாண்டி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

வெட்டிக்கொலை

நேற்று காலையில் கொம்பையா தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அவரது வயலுக்கு கொண்டு சென்றார். அப்போது, அங்கு கருத்தபாண்டி உள்பட 3 பேர் வந்தனர்.

அவர்களுக்கும், கொம்பையாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கருத்தபாண்டி உள்ளிட்டவர்கள் அரிவாளால் கொம்பையாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கருத்தபாண்டி உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

போலீஸ் வலைவீச்சு

வயலில் கொம்பையா பிணமாக கிடந்ததை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரது குடும்பத்துக்கும், சுத்தமல்லி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொம்பையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருத்தபாண்டி உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

பரபரப்பு

கொம்பையாவின் மகளை, கருத்தபாண்டியின் நாய் கடித்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 30-ந் தேதி சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் விசாரணை நடத்த காலம்தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலையை தடுத்திருக்கலாம் என்று கொம்பையாவின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

நெல்லை அருகே விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்